Monday, August 3, 2015

அரிசி போளி


தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப் (நீரில் கழுவி, நிழலில் உலர்த்தி, அரைத்தது), தேங்காய்த் துருவல் - கால் கப், மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், மிகவும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடிகனமான வாணலியில் முக்கால் கப் நீர் விட்டு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாக போட்டுக் கிளறி கெட்டியானதும் இறக்கவும்.
இந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, போளி போல தட்டி, தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, மறு புறமும் திருப்பிப் போட்டு, வெந்தபின் எடுக்கவும்.

க்ரீன் உப்புமா


தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், கொத்தமல்லித்தழை - ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளி - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், புளி ஆகிய வற்றை ஒன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இரண்டரை கப் நீர் சேர்க்கவும். இதில் அரைத்த கொத்தமல்லி விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்து நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்), வேகவிடவும். வெந்த பின் நன்றாக கிளறி, சுடச்சுட பரிமாறவும்.

பம்ப்கின் கிரேவி


தேவையானவை: வெள்ளைப் பூசணி - கால் கிலோ, கடலைப்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பூண்டு - 3 பல் (நசுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளைப் பூசணியை தோல், விதை, நீக்கி பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.  வேகவைத்த பருப்பை வாணலியில் போட்டு, நறுக்கிய வெங்காயம், பூசணி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு நன்கு வேகவிடவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பூசணி கிரேவியில் சேர்த்துக் கலந்து, இறக்கிப் பரிமாறவும்.

புழுங்கலரிசிக் கஞ்சி


தேவையானவை: புழுங்கல் அரிசி ரவை - அரை கப், பூண்டு - 6 பல், மோர் - 2 கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புழுங்கல் அரிசி ரவையுடன் நீர் சேர்த்து... தோல் உரித்து, பொடியாக நறுக்கிய  பூண்டையும் சேர்த்து நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வெந்தவுடன் ஆறவிட்டு... மோர், தேவையான உப்பு சேர்த்துப் பருகவும்.

பூண்டுக் குழம்பு


தேவையானவை: பூண்டு - 20 பல்,  சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சைப் பழம் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, வெந்தயம் - அரை டீஸ்பூன், வெல்லத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - 
தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, சின்ன வெங் காயத்தை தோல் உரிக்கவும். தக் காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். வாணலி அல்லது மண்சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறி வேப்பிலை, வெந்தயம் தாளித்து, பூண்டைப் போட்டு வதக்கவும். பிறகு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, ஒன்றிரண்டாக அரைத்த தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு மஞ்சள்தூள், மிள காய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கெட்டி யானதும் வெல்லத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

முளைக்கீரை மசியல்


தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், பச்சை மிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டு - 4 பல், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைக்கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழையாமல் வேகவிடவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரையுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும், உப்பு சேர்த்துக் கடையவும். பிறகு, வேகவைத்த பருப்பு, நெய் சேர்த்து மேலும் ஒரு முறை கடைந்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

ஹனி சப்பாத்தி


தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், தேன் - 3  டேபிள்ஸ்பூன், வறுத்த கறுப்பு எள் - 2 டீஸ்பூன், நெய் - 4 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவுடன் தேன், 2 டேபிள்ஸ்பூன் நெய், எள், சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து, தேவையான நீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள நெய்யை எண்ணெயுடன் கலக்கவும். பிசைந்த மாவை  சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் - எண்ணெய் கலவையை விட்டு சுட்டு எடுக்கவும்.